புதிய ஜவுளிக்கொள்கையில் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகள் இடம் பெற வேண்டும்: தமிழக அரசுக்கு சிஸ்மா சங்கம் கோரிக்கை

புதிய ஜவுளிக்கொள்கையில் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகள் இடம் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சிஸ்மா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-03-30 22:11 GMT
திருப்பூர்,

சிஸ்மா கடிதம்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, சிஸ்மா சங்க தலைவர் பாபுஜி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- பின்னலாடை துறைக்கு மூலப்பொருளாக பயன்படும் நூல் உற்பத்திக்கு தேவையான பருத்தி சாகுபடியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி பருத்தி விவசாயத்தை தமிழகத்தில் ஊக்குவிக்க வேண்டும். பருத்தி விவசாயத்தில் மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்களை வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய ஜவுளிக்கொள்கையை கொண்டுவந்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானா மாநிலத்தில் 40 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகிறது. இதில் அங்குள்ள தொழில்துறையினர் பயன்பாட்டிற்கு 10 லட்சம் பேல்களை வைத்துக்கொண்டு மீதமுள்ள 30 லட்சம் பேல்களை விற்பனை செய்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் 30 லட்சம் பேல்களையும் தங்களது மாநிலத்திற்குள் பின்னலாடைகளாகவும், ஜவுளிசார்ந்த உற்பத்திகளாகவும் தங்களது மாநிலத்திற்குள் பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளனர்.

நூல் உற்பத்தி குறைய வாய்ப்பு

ஆனால் தமிழகத்தில் 5 லட்சம் பேல் பருத்தி மட்டும் உற்பத்தியாகிறது. பின்னலாடை மற்றும் ஜவுளித்துறை பயன்பாட்டிற்கு ஒரு ஆண்டிற்கு 130 லட்சம் பேல் பருத்தி தேவைப்படுகிறது.

இதனால் மீதம் பற்றாக்குறையாக உள்ள 125 லட்சம் பேல்கள் பருத்தியை மற்ற மாநிலங்களில் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், பருத்தி விலையேற்றம், நூல் விலையேற்றம் என பல்வேறு இன்னல்களை தொழில்துறையினர் சந்தித்து வருகின்றனர்.

ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் திருப்பூர் தொழில்துறையினரை தொழில் தொடங்க வருமாறு பல்வேறு சலுகைகள் அறிவித்து அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அந்தந்த மாநில வளர்ச்சிக்காக பருத்தியை அவர்களது மாநிலத்திற்குள்ளேயே பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழகத்திற்கு தேவையான பருத்தி விற்பனையை குறைத்தால், தொழில்துறையினருக்கு தேவையான நூல் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.

பருத்தி உற்பத்தியை...

நூல் உற்பத்தி குறைந்தால் விலை உயரவும் இது ஒரு காரணமாகி விடும். எனவே தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பருத்தி விளைச்சலில் ஈடுபட விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள், பூச்சி மருந்து போன்றவற்றை வழங்க வேண்டும். புதிதாக உருவாக இருக்கும் ஜவுளி கொள்கையில் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகள் இடம் பெற வேண்டும். அந்தந்த மாநில வளர்ச்சிக்கு ஏற்றுவாறு மாநில அரசுகள் திட்டமிடுவதால் தமிழகத்தில் பின்னலாடை ஜவுளி உற்பத்தியை பாதிப்படைய செய்யாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு பருத்தி சாகுபடியை மேம்படுத்த வேண்டும் என ஜவுளித்துறை சார்பாகவும், தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) சார்பாகவும் கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்