பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 5 சதவீத சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 5 சதவீத சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
சம்பளத்தை உயர்த்த வேண்டும்
பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள சங்க அலுவலக கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பனியன் சங்க செயலாளர் மனோகரன் முன்னிலைவகித்தார். ம.தி.மு.க. திருப்பூர் மாநகர செயலாளர் சிவபாலன், பஞ்சாலை சங்க செயலாளர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில், திருப்பூர் பனியன் நிறுவனங்களில் சிப்ட் முறை மற்றும் பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தற்போது பெறும் அடிப்படை சம்பளத்தில் இருந்து 5 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இதர சலுகைகளான திருமண உதவி, குடும்பநல உதவி, இன்சூரன்ஸ் மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளை பனியன் நிறுவனத்தினர் தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.
பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும்
திருப்பூரின் மிக பிரதான தொழிலாக இருந்து வரும் பனியன் தொழிலில் மத்திய அரசின் டியூட்டி டிராபேக் எனப்படும் ஊக்கத்தொகை குறைப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளிட்டவைகளால் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து காணப்படுகின்றனர். அதனால் அரசு இதில் உடனடியாக தலையிட்டு பனியன் தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க மத்திய அரசு உறுதியளித்து, அதற்கான இடம் தேர்வாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வருகிறது. இதனால் இந்த பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தொழிலாளர் தினமான வருகிற மே மாதம் 1-ந்தேதி எம்.எல்.எப். பனியன் சங்கம் சார்பில் அனைத்து பகுதிகளிலும் கொடியேற்று விழா நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.