காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல பாதையில் பயணிகள் ரெயில் சேவை தொடக்கம்

காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதையில் நேற்று பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

Update: 2018-03-30 21:45 GMT
காரைக்குடி,

காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே 73 கிலோ மீட்டர் தூரத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று சில மாதத்திற்கு முன்பு நிறைவு பெற்றது.

இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் குழு இந்த ரெயில் தடத்தில் டிராலியில் சென்று தண்டவாளம், பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

கடந்த 1-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ் ஆகியோர் காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் பாதையில் வெற்றிகரமாக சோதனை ரெயில் ஓட்டத்தை நடத்தினர். இதையடுத்து நேற்று காலை இத்தடத்தில் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.

இதையடுத்து காரைக்குடி ரெயில் நிலையத்தில் காலை 10.12 மணிக்கு அகலரெயில் பாதையில் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி கூடுதல் கோட்ட மேலாளர் ஹரி, முதன்மை மேலாளர் பிரசன்னா, முதன்மை வணிக மேலாளர் அருண்தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். காரைக்குடியில் புறப்பட்ட பயணிகள் ரெயில் கண்டனூர்-புதுவயல், பெரியகோட்டை, வளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயங்குடி, பேராவூருணி, ஒட்டங்காடு வழியாக பட்டுக்கோட்டையை அடையும்.

அங்கிருந்து மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டு காரைக்குடியை வந்தடை யும். இந்த ரெயிலில் காரைக்குடி-பட்டுக்கோட்டைக்கான ரெயில் கட்டணம் ரூ.20. நேற்று தொடங்கிய இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் ஆர்வத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். நேற்று இயக்கப்பட்ட இந்த பயணிகள் ரெயில் அடுத்தக்கட்ட நடைமுறைகளுக்கு பின்னர் சில நாட்களில் தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்