கோத்தகிரி பகுதியில் கடும் வறட்சி: உணவு தேடி தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமைகள்

கோத்தகிரி பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் உணவு தேடி காட்டெருமைகள் தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன.

Update: 2018-03-30 21:45 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வறட்சியான காலநிலை நிலவி வருவதுடன் சமவெளி பகுதிகள் போலவே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வருவதுடன் புற்கள், செடி, கொடிகள், காய்ந்து வருகின்றன.

இதன் காரணமாக வனப்பகுதிகளில் தண்ணீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், தேயிலை தோட்டங்களுக்கும் வந்து செல்ல தொடங்கி உள்ளன.

கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள காம்பாய் கடை, ஹேப்பி வேலி, மாரியப்பன் லைன், வியூஹில் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித் திரிவதுடன் இரவு நேரங்களில் அருகிலுள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

இந்த பகுதியை ஒட்டி தாசில்தார் அலுவலகம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு மேல்நிலைப்பள்ளி, கோர்ட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பகல் நேரங்களில் கூட காட்டெருமைகள் இந்த பகுதிகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டெருமைகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டவும், வனப்பகுதியில் உள்ள நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிறைத்து வைத்து காட்டெருமைகள் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்