திண்டுக்கல்லில் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் திடீர் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் திண்டுக்கல்லில் நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.

Update: 2018-03-30 22:15 GMT
திண்டுக்கல்,

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது. நேற்று பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவிகளில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

தற்போது, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் ரெயில்களிலேயே செல்கின்றனர். அதன்படி, நேற்று பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் ஏராளமானோர் பயணம் செய்தனர். மேலும் மதுரை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு செல்வதற்காகவும் ஏராளமான பயணிகள் திண்டுக்கல்லில் காத்திருந்தனர். பாலாக்காடு-திருச்செந்தூர் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 9.50 மணிக்கு வந்தது.

அப்போது, அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், கொடைரோடு-வாடிப்பட்டி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திண்டுக்கல்லுடன் ரெயில் நிறுத்தப்படுகிறது. எனவே அனைவரும் இறங்கி அடுத்த ரெயில்களில் செல்லுமாறு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இறங்கி அடுத்து வரும் ரெயிலுக்காக சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர்.

இதுகுறித்து பயணிகளிடம் கேட்டபோது, பாலக்காட்டில் ஏறும்போது விருதுநகர் வரை ரெயில் செல்லும் என்று கூறினர். இதை நம்பி மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களுக்கு செல்ல டிக்கெட் எடுத்திருந்தோம். ஆனால், திடீரென திண்டுக்கல்லிலேயே இறக்கி விட்டுவிட்டனர். இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். ரெயில்வே நிர்வாகம் முன்கூட்டியே முறையாக அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்