வீட்டு முன் நிறுத்தி இருக்கும் ஆட்டோக்களில் இருந்து சக்கரங்கள் திருடிய 2 பேர் கைது

வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு முன் நிறுத்தி இருக்கும் ஆட்டோக்களில் இருந்து சக்கரங்களை திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-30 21:42 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டுக்கு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஆட்டோக்களில் இருந்து சக்கரங்கள் திருடப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ராயலா நகர் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு ராமாபுரம் பகுதியில் ஒரு வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்த ஆட்டோவில் இருந்து ஒருவர் சக்கரத்தை கழற்றிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த ரோந்து போலீசார், சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து விசாரித்தனர்.

அதற்கு அவர், அது தனது ஆட்டோ எனவும், பஞ்சர் ஆனதால் சக்கரத்தை கழற்றி கொண்டு இருப்பதாகவும் கூறினார். ஆனாலும் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்த போது அவர், ஆட்டோவில் இருந்த சக்கரத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

2 பேர் கைது

இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், சென்னை பல்லவன் சாலை, காந்தி நகரைச் சேர்ந்த கோபி (வயது 30) என்பது தெரிந்தது. இவர், இரவு நேரங்களில் காக்கி சட்டை அணிந்துகொண்டு ஆட்டோ டிரைவர் போல் வலம் வருவார். பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தி இருக்கும் ஆட்டோக்களின் சக்கரங்களை கழற்றி எடுத்துச் சென்று விற்றுவிடுவார்.

காக்கி சட்டை அணிந்து இருப்பதால் போலீசாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வளசரவாக்கம், ராமாபுரம், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோல் வீட்டு முன் நிறுத்தி இருக்கும் ஆட்டோக்களில் இருந்து சக்கரங்களை திருடி இருப்பது தெரியவந்தது.

இப்படி திருடிய சக்கரங்களை சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த முருகன் (48) என்பவரிடம் விற்றதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து கோபி, முருகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 சக்கரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்