பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 308 பெண்கள் பால்குட ஊர்வலம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 308 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
திருவொற்றியூர்,
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு எண்ணூர் அனல்மின் நிலையம் அருகே உள்ள சிவா விஷ்ணு கோவிலில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு 308 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி எண்ணூர் அனல்மின் நிலைய 1-வது குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த 308 பெண்கள் தலையில் பால் குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் சுப்பிரமணிய சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும், கோவில் வளாகத்தில் உற்சவர் வீதி உலாவும் நடைபெற்றது.