வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தலைவாசல்,
தலைவாசல் அருகே வடசென்னிமலையில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பாலசுப்பிரமணியசாமிக்கு பல்வேறு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு மூலவர் பாலசுப்பிரமணிய சாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4.30 மணிக்கு காட்டுக்கோட்டைபுதூர் கிராமமக்கள், கட்டளைதாரர்கள் மாவிளக்கு தட்டுகளுடன் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
வடம் பிடித்தனர்
இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு காட்டுக்கோட்டைபுதூர் கிராமமக்கள், கட்டளைதாரர்கள் பாலசுப்பிரமணியசாமி தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் கெங்கவல்லி மருதமுத்து, ஆத்தூர் தொகுதி சின்னத்தம்பி, உதவி கலெக்டர் செல்வன், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராசன், கோவில் ஆய்வாளர் யோகலட்சுமி, தலைவாசல் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்தனர்.
ஆத்தூர், தலைவாசல், சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை தேர் முன்பு வீசினார்கள். தேரோட்டத்தை முன்னிட்டு காட்டுக்கோட்டை ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பக்தர்கள் இரும்பு கம்பியால் அலகுகுத்தி வந்தனர். சில பக்தர்கள் இளநீர் காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள அவ்வையார் கோவிலில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் கட்டினார்கள். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 6.30 மணிக்கு நிலை சேர்ந்தது. விழாவையொட்டி தண்ணீர் பந்தல், அன்னதான பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடியிறக்கம்
தேரோட்டத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், பாலமுருகன் இறைபணி மன்ற தலைவர் கூட்ரோடு ராமசாமி கவுண்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்மராஜா, அமுதராணிசண்முகம், தமிழ்செல்வி வேல்முருகன், பரமசிவம், தொழில் அதிபர்கள் வெங்கட்ராமன், எஸ்.எஸ்.பிரபு, செந்தில், வக்கீல் ராஜேந்திரன் மற்றும் நத்தக்கரை வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனஇயக்குனர்கள், சாமியார் கிணறு ஜெயம் கல்வி நிறுவன இயக்குனர்கள், எஸ்.ஆர்.எம்.முத்தமிழ் கல்வி நிறுவன இயக்குனர்கள், கீரிப்பட்டி ஹோலிமதர் மெட்ரிக்குலேசன் இயக்குனர்கள், பாவேந்தர் கல்வி நிறுவன இயக்குனர்கள், ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுரேஷ்குமார் செய்திருந்தார். இன்று(சனிக்கிழமை) காலை மூலவருக்கு சிறப்பு பூஜையும், மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும், இரவில் இன்னிசை பாட்டுமன்றமும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சத்தாபரணம், கரகாட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.