ஓசூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ஓசூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2018-03-30 23:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையத்தில் செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு, அசோக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர், அம்மா வழியில் நல்லாட்சி, அதற்கு ஓராண்டு சாட்சி என்ற விழிப்புணர்வு வாசகத்தை பஸ்களில் அமைச்சர் ஒட்டினார். இந்த நிகழ்ச்சியில், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், ஓசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மோகன், மனோஜ்குமார், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் நாராயணன், மாவட்ட பாசறை தலைவர் மாரேகவுடு, மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் நாராயணன், கூட்டுறவு வங்கி தலைவர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்பட கண்காட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசு திட்டங்களான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், பசுமை வீடு வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்குதல் மற்றும் திருமண நிதி உதவி, ஏரிகள் தூர் வாருதல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து நவீன டிஜிட்டல் வாகனம் மூலம் தமிழக முதல்வரின் ஓராண்டு குறித்து குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்