இறந்து கரை ஒதுங்கிய பேத்தல் மீன்

வேதாரண்யத்தில் கடல் வெப்பம் அதிகமானதால் பேத்தல் மீன் இறந்து கரை ஒதுங்கியது.

Update: 2018-03-30 22:15 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் கடல் வெப்பம் அதிகமானதால் ஏராளமான பேத்தல் மீன்களும், டால்பின் மீன்களும் மற்றும் ஆலிவர்ரெட்லி ஆமைகளும் நாள்தோறும் இறந்து கரை ஒதுங்குகின்றன. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஆலிவர்ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்கு வந்துசெல்லும். இவ்வாறு வந்து செல்லும் ஆமைகள் விசைப்படகுகளில் அடிபட்டு இறந்து நாள்தோறும் கரை ஒதுங்குகின்றன. இதேபோல் டால்பின் மீன்களும் நாள்தோறும் இறந்து கரை ஒதுங்குகின்றன. இந்தநிலையில் ஆழ்கடல் பகுதியில் குளிர்ந்த நீரில் வசிக்கும் பேத்தல் வகை மீன்களும் கடல் நீர் வெப்பம் அதிகமானதால் நாள்தோறும் இறந்து கரை ஒதுங்குகின்றன. இந்த வகை சிறிய மீன்களை மீனவர்கள் பேத்தல் என்றும், தொப்புளான் என்றும் அழைக்கின்றனர். இந்த மீனின் மேற்பகுதியில் உடல் முழுவதும் முள் போன்று உள்ளது.

கடலில் பெரிய மீன்கள் இவற்றை விழுங்க வரும் போது இந்த மீன்கள் உருண்டை வடிவில் முள் பந்து போன்று தன்னுடைய உடம்பை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இந்த மீனை முன்பெல்லாம் பொதுமக்கள் சாப்பிடுவதில்லை. சமீபகாலமாக வேதாரண்யம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கும் இந்த மீன்கள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறைந்த விலைபோகும் இந்த மீன் கருவாடாகவும் விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்