புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2018-03-30 21:00 GMT
புளியங்குடி,

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பாலசுப்பிரமணிய சுவாமி

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது.

தேரோட்டம்

10–ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. தேர் திருப்பணிக்குழு தலைவர் சங்கரநாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

அரோகரா கோ‌ஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து 11 மணியளில் நிலையத்தை அடைந்தது. ரதவீதிகளில் ஆங்காங்கே பக்தர்களின் தாகம் தீர்க்க நீர்மோர் வழங்கப்பட்டது.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்–இன்ஸ்பெக்டர் பவுன் என்ற பத்திரகாளி ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6 மணிக்கு திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்