தமிழகத்தின் உரிமையை பெற முடியும்

காவிரி நீர் பிரச்சினையில் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தமிழகத்தின் உரிமையை பெற முடியும் என விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலாளர் மாசிலாமணி கூறினார்.

Update: 2018-03-30 21:45 GMT
திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் மாசிலாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

50 ஆண்டு கால காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணவே மத்திய அரசின் நதிநீர் தாவா சட்டம் 1956-ன் படி 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து 1991-ம் ஆண்டு இடைக்காலமாக 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் மற்றும் காரைக்காலுக்கு வழங்கிட தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்க மறுத்தது. மத்திய அரசு இதை வேடிக்கை பார்த்து வந்த நிலையில் தான் நடுவர் நீதிமன்றத்தின் தலைவர் தன் பதவியை விட்டு விலக வேண்டிய சூழலை ஏற்படுத்தியது.

இதனால் 5 ஆண்டுகளில் வழங்க வேண்டிய இறுதி தீர்ப்பு 16 ஆண்டுகள் கடந்து 2007-ம் ஆண்டு வெளியிடும் சூழலை கர்நாடகா எற்படுத்தியது. இறுதி தீர்ப்பு 12.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து 192.25 டி.எம்.சி. என வழங்க உத்தரவிட்டது. இதையும் கர்நாடகம் ஏற்க மறுத்ததுடன், தீர்ப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு நடுநிலையாக நடந்து கொள்ளாது தீர்ப்பின்படி குழுக்களை அமைக்காது மறைமுகமாக கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு, 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, இதற்கான காலமும் முடிவடைந்து விட்டது. தற்போது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக அதிகாரமற்ற காவிரி மேற்பார்வை குழுவை அமைப்பதால் எந்தவித பயனும் கிடைக்காது. தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. எனவே காவிரி நீர் பிரச்சினையில் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் தமிழகத்தின் உரிமையை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்