பூசாரி கடத்தல் கூலிப்படையை சேர்ந்த 7 பேர் கைது

வேடசந்தூர் அருகே ரூ.1½ கோடி கேட்டு கோவில் பூசாரியை ஒரு கும்பல் கடத்தியது. இது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2018-03-30 00:05 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் தங்கம்மாபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர், அந்த பகுதியில் உள்ள தங்கமுனியப்பன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர், மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இவரை மாந்திரீக வேலைக்காக பலர் அழைத்து செல்வார்கள்.

இந்தநிலையில், சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதாக கூறி வேடசந்தூருக்கு வந்து, சக்திவேலை சென்னைக்கு அவர் அழைத்து சென்றார். அங்கு சென்ற பூசாரி, பில்லி சூனியத்தை எடுப்பதற்காக சிறப்பு பரிகார பூஜை செய்ய வேண்டும், அதற்கு ரூ.1½ கோடி வரை செலவாகும் என்று கூறினார்.

இதையடுத்து பெண் தொழில் அதிபர், பூசாரியிடம் அந்த தொகையை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சக்திவேல், பூஜைகள் நடத்தியுள்ளார். ஆனால் அவர் செய்த பரிகார பூஜை பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சக்திவேலிடம் ரூ.1½ கோடி இருப்பதாக, பழனியை சேர்ந்த மதன் (45) என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர், பூசாரியை கடத்தி சென்று பணம் பறிக்க திட்டமிட்டதாக தெரிகிறது. இதற்காக, கூலிப்படையை சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து பேசியுள்ளார். பின்னர் ஒரு பெண் மூலம் செல்போனில் சக்திவேலை தொடர்பு கொண்டார்.

அப்போது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனது தென்னந்தோப்பில் தேங்காய் விளைச்சல் இல்லை. யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும், பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் அந்த பெண் கூறினார். இதனை நம்பி சக்திவேல் தனது காரில் உறவினர் பெருமாள் என்பவருடன் நேற்று முன்தினம் தாராபுரத்துக்கு புறப்பட்டார். காரை பிச்சைமுத்து என்பவர் ஓட்டினார்.

ஒட்டன்சத்திரத்தை கடந்து தாராபுரம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் வந்தவர்கள், சக்திவேலின் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். காரை நிறுத்தியதும், சக்திவேல் உள்பட 3 பேரையும் தங்களுடைய காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பூசாரியின் காரை மற்றொருவர் ஓட்டி வந்தார். தாராபுரத்துக்கு முன்பாக ஒரு தென்னந்தோப்புக்குள் சென்று கார் நின்றது. இதையடுத்து சக்திவேலை தென்னைமரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபரிடம் வாங்கிய ரூ.1½ கோடியை கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ள னர். வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த சக்திவேல், தனது உறவினரான கிருஷ்ணமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டில் உள்ள பணத்தை எடுத்து வரும்படி கூறியுள்ளார். அப்போது, தான் இருக்கும் இடம் குறித்தும் தெரிவித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமாரிடம் புகார் செய்தார். இதையடுத்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட தென்னந்தோப்புக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மதன், சக்திவேலின் காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். மற்ற அனைவரையும் சுற்றிவளைத்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள், கரூர் பழனியப்பாநகரை சேர்ந்த சக்திவேல் (47), நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த வசந்த் (28), மேலப்பாளையத்தை சேர்ந்த முருகன் (37), திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பிரகாஷ் (35), தாராபுரம் பெரியகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கர்ணன் (50), சின்னதாராபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47), பழனி பெத்தநாயக்கன்புரத்தை சேர்ந்த பத்ரகாளி (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரையும் கைது செய்து, வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். பூசாரி சக்திவேலையும் போலீசார் மீட்டனர்.

இதற்கிடையே தப்பி சென்ற மதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சக்திவேலிடம் செல்போனில் பேசிய பெண் யார்? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மதனை பிடித்து விசாரித்தால்தான், பூசாரியிடம் ரூ.1½ கோடி இருப்பது அவருக்கு எப்படி தெரிந்தது என்ற விவரம் தெரியவரும்.

மேலும் சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபரிடம் மாந்திரீக வேலைக்காக, பூசாரி சக்திவேல் ரூ.1½ கோடி வாங்கினாரா? என்றும், அந்த தொழில் அதிபர் யார்?, இந்த தகவல் கூலிப்படைக்கு எப்படி தெரிந்தது? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்