உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள்

கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 85 பண்ணை எந்திரங்களை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

Update: 2018-03-29 23:54 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் உழவர் உற்பத்தியாளர்் குழுக்களின் மூலம் தொகுப்பு நிதியின்கீழ் கொள்முதல் செய்யப்பட்ட பண்ணை எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 9 உழவர் உற்பத்தியாளர்் குழுக்களுக்கு 33 களை எடுக்கும் கருவிகள், 1 கதிரடிக்கும் எந்திரம், 3 விதைப்பு கருவிகள், 20 சிறிய களை எடுக்கும் கருவிகள், 3 பவர் டில்லர்கள், 21 புல் வெட்டும் கருவிகள் என ரூ.45 லட்சம் மதிப்புள்ள 85 பண்ணை எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:- கூட்டுப்பண்ணையம் என்ற புதுமையான திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒரே பகுதியிலுள்ள சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 20 விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்களாகவும், 5 உழவர் ஆர்வலர் குழுக்களை இணைத்து 100 விவசாயிகள் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களாகவும் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் உற்பத்தி செலவை குறைப்பது போன்ற சிறந்த தொழில்நுட்பங்களை கருத்துப் பரிமாற்றம் செய்து தங்களது உற்பத்தித் திறனை பெருக்குதல், 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து 1000 விவசாயிகள் கொண்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக தரம் உயர்த்தி விவசாய உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டாக ஒருங்கிணைத்து வாழ்வாதாரத்தை உயர்த்துதல், விவசாயிகளுக்கு கடன் பெறுவது மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை களைதல், விவசாயிகள் கூட்டாக விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தின்கீழ் 2017-18-ல் 20 சிறு, குறு விவசாயிகளை கொண்டு அமைக்கப்பட்ட 240 உழவர் ஆர்வலர் குழுக்களில் 5 உழவர் ஆர்வலர் குழுக்களை இணைத்து 48 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குனர்கள் தவமுனி, கிருஷ்ணகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்