56 ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 56 ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 10-ந்தேதி கடைசி நாளாகும்.

Update: 2018-03-29 22:36 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் மாவட்ட அளவில் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

ஓராண்டுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்ட சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்கள் வேக, வேகமாக நிரப்பப்பட்ட நிலையில் அடுத்ததாக 400 சத்துணவு அமைப்பாளர் பணியிடங் களை நிரப்புவதற்கான நேர்காணல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான அறிவிப்பும் ஓராண்டுக்கு முன் வெளியிடப்பட்டதாகும்.

அடுத்ததாக கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 56 ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு புதிதாக வெளியிடப்பட்டு உள்ளது. இப்பணிக்கான காலியிடங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய அறிவிப்பு மாவட்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

எனவே மாவட்ட இணைய தளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம்(கிராம ஊராட்சி) அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 10-ந்தேதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்