மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் ஈரோட்டில் பயணிகள் திடீர் ரெயில் மறியல்
மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் ஈரோட்டில் பயணிகள் திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.35 மணிஅளவில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது பயணிகள் பலர் ரெயிலில் இருந்து இறங்கினார்கள். அவர்கள் விறுவிறுவென ரெயில் என்ஜின் முன்பு சென்றார்கள். அங்கு ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பெரும் சிரமப்படுவதாகவும், தண்ணீரை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் என்ஜின் டிரைவரிடம் பயணிகள் முறையிட்டனர். மேலும், தண்ணீர் நிரப்பும் வரை ரெயிலை இயக்கக்கூடாது என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல் சென்றதும் தண்ணீர் நிரப்பப்படும் என்று என்ஜின் டிரைவர் கூறியதாக தெரிகிறது. இதனால் பயணிகள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் என்ஜினின் முன்பு திடீரென திரண்டு நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் நிரப்ப கோரிக்கை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் கூறியதாவது:-
குப்பம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ரெயில் வந்தபோது பல்வேறு பெட்டிகளில் தண்ணீர் இல்லை. இதனால் கழிப்பறைக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டோம். குறிப்பாக பெண்கள் பெரும் அவதி அடைந்தனர். அங்கு ரெயில் நின்றபோது ஈரோட்டிற்கு சென்றதும் தண்ணீர் நிரப்பப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே ஈரோட்டிற்கு வந்ததும் ரெயிலில் தண்ணீர் நிரப்பப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இங்கும் தண்ணீர் நிரப்பப்படவில்லை.
நாங்கள் 2 நாட்களாக ரெயிலில் பயணம் செய்கிறோம். அவசரத்திற்கு தண்ணீர் இல்லாதபோது எப்படி எங்களால் பயணம் செய்ய முடியும். எனவே ரெயிலில் தண்ணீர் நிரப்பும் வரை ரெயிலை இங்கிருந்து புறப்பட விடமாட்டோம்.
இவ்வாறு பயணிகள் கூறினார்கள்.
காலதாமதம்
அதன்பின்னர் ரெயிலில் தண்ணீர் நிரப்ப ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அனைத்து பெட்டிகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்ட பிறகு 1 மணிநேரம் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.45 மணிஅளவில் கரூர் நோக்கி ரெயில் புறப்பட்டது. ஏற்கனவே சுமார் 2 மணிநேரம் ரெயில் காலதாமதமாக ஈரோட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் திடீர் ரெயில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.