புனித அமல அன்னை ஆலயத்தில் பாதம் கழுவும் வழிபாடு
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பாதம் கழுவும் வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு,
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தையநாள் அவருடைய 12 சீடர்களுடன் கடைசி இரவு உணவு அருந்தியதையும், நற்கருணையை நிறுவியதையும் நினைவுகூறும் வகையில் புனித வியாழன் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருண் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிகழ்வின்போது பாதம் கழுவும் வழிபாடு நிறைவேற்றப்பட்டது. இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்து முத்தமிட்டதை நினைவுகூறும் வகையில் இந்த சடங்கு நடத்தப்பட்டது.
நற்கருணை இடமாற்றம்
திருப்பலியை தொடர்ந்து நற்கருணை இடமாற்றம் செய்யும் நிகழ்வு நடந்தது. வழக்கமாக ஆலயத்தின் நற்கருணை பேழையில் வைக்கப்படும். நேற்று மிகுந்த வணக்கத்துடன் எடுத்து செல்லப்பட்டு ஆலயத்தின் உள்ளே மாற்று இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த பீடத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆராதனை நிகழ்வுகள் நடந்தன.
நற்கருணை முன் அமர்ந்து கிறிஸ்தவர்கள் நள்ளிரவு 12 மணி வரை ஆராதனையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் உதவி பங்குத்தந்தை சிஜூ, அருட்தந்தை ஜான்கென்னடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஈஸ்டர் பெருவிழா
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு ஆராதனை தொடங்குகிறது.
பகல் 11 மணிக்கு ஆலய வளாகத்தில் பெரிய சிலுவை பாதை வழிபாடு நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திருவழிபாட்டு சடங்குகள், திருச்சிலுவை முத்தம் ஆகிய வழிபாடுகள் நடைபெறும். பின்னர் ஆலயம் மூடப்படுகிறது.
நாளை (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு கல்லறையில் இருந்து இயேசு உயிர்த்தெழுந்த உயிர்ப்பு நிகழ்வை கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.