பிளஸ்-1 மாணவரை அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த போலீஸ்காரர்களுக்கு ரொக்கப்பரிசு

பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவரை அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த 2 போலீஸ்காரர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

Update: 2018-03-30 00:30 GMT
விழுப்புரம்,

கிளியனூர் அருகே கொந்தமூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 இயற்பியல் மற்றும் பொருளியல் பாடத்தேர்வு நடந்தது.

இந்த தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் கிளியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் மதன் ஈடுபட்டிருந்தார். அப்போது 9.50 மணி அளவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், போலீஸ்காரர் மதனிடம் வந்து மாணவர் மோனிஷ் மட்டும் தேர்வுக்கு வரவில்லை என்றார்.

உடனே போலீஸ்காரர் மதன், மற்றொரு போலீஸ்காரரான மணிகண்டனை தொடர்பு கொண்டு மாணவரின் வீட்டிற்கு சென்று அழைத்து வருமாறு கூறினார்.

அதன்படி போலீஸ்காரர் மணிகண்டன், மாணவர் மோனிஷின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரித்தார். அங்கு பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு மோனிஷ், தேர்வு எழுத செல்லாமல் வீட்டில் இருந்தது தெரிந்தது.

உடனே மோனிசை போலீஸ்காரர் மணிகண்டன் சமாதானப்படுத்தி, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொந்தமூர் பள்ளிக்கு அழைத்து வந்தார். அதற்குள் தேர்வு தொடங்கி விட்டது. இருப்பினும் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று காலை 10.10 மணிக்கு மாணவர் மோனிஷ், தேர்வு எழுத சென்றார். தேர்வு முடிந்த பின்னர் வெளியே வந்த மாணவர் மோனிஷ், அந்த போலீஸ்காரர்கள் இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இது பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், 2 போலீஸ்காரர்களுக்கும் நேற்று ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்