ஆசனூர் அருகே ரோட்டோரம் சுற்றித்திரியும் காட்டெருமை

ஆசனூர் அருகே ரோட்டோரம் காட்டெருமைகள் சுற்றித்திரிகின்றன.

Update: 2018-03-29 22:22 GMT
தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக் கடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விடுகின்றன. அவ்வாறு செல்லும் வனவிலங்குகள் அங்குள்ள ரோடுகளை கடக்கின்றன.

சுற்றித்திரியும் காட்டெருமைகள்

இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சி காரணமாக அங்குள்ள காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதி ரோட்டோரம் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக ஆசனூர் வழியாக செல்லும் திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையை காட்டெருமைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. அவ்வாறு ரோட்டோரங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகளை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் படம் எடுக்கிறார்கள்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆசனூர் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் காட்டெருமைகள் உணவு தேடி ரோட்டோரம் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் காட்டெருமைகள் ஆசனூரில் உள்ள திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றன. எனவே அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், வனவிலங்குகளை கண்டால் தங்களுடைய வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும். மேலும் ரோட்டோரம் சுற்றித்திரியும் மற்றும் கடக்கும் காட்டெருமைகளை தொந்தரவு செய்யக்கூடாது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது வனத்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். 

மேலும் செய்திகள்