சேலம் சுகவனேசுவரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு, சென்னை டாக்டர் குழுவினர் சிகிச்சை
சேலம் சுகவனேசுவரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு, சென்னை டாக்டர் குழுவினர் நேற்று சிகிச்சை அளித்தனர்.;
சேலம்,
சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான யானை ராஜேஸ்வரி இடது கால் ஊனம் காரணமாக நிற்க முடியாமல் வலதுகால் உதவியுடன் நின்று வந்தது. நாளடைவில் வலது காலிலும் வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சரிவர நிற்க முடியாத காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யானை கோரிமேட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி யானை ராஜேஸ்வரி நிற்க முடியாமல் படுத்தது. அதன் பின்னர் இதுவரை யானையால் எழும்ப முடியவில்லை. படுத்த படுக்கையான பின்னர் டாக்டர்கள் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். யானை ராஜேஸ்வரிக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய வகையில் தினமும் வெள்ளரி, திராட்சை, குளுக்கோஸ், தர்பூசணி, அன்னாசி பழங்கள், செவ்வாழை ஆகியவை உணவாக கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து படுத்த நிலையில் இருப்பதால் யானையின் வலது புற பகுதியில் புண் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை டாக்டர் குழு
கால்நடை பராமரிப்புத்துறை சேலம் மண்டல இணை இயக்குனர் டாக்டர் லோகநாதன் தலைமையிலான டாக்டர் குழுவினர் தொடர்ந்து யானையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியின் வனவிலங்கியல் துறை பேராசிரியர் டாக்டர் பழனிவேல், சிகிச்சை இயல்துறை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் யானை ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளித்தனர். யானையின் வலது புறம் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்திட்டனர். யானையின் இடது பக்க காது மடலையும் டாக்டர்கள் ஆய்வு செய்தனர். மேலும் காலில் ஏற்பட்ட புண்ணும் ஆறி வருவதை கண்டனர்.
யானைக்கு கொடுக்கப்பட்டு வரும் உணவு முறைகளையும், இதுவரை அளித்து வந்த சிகிச்சை முறைகளையும் அக்குழுவினர் கேட்டறிந்தனர். யானைக்கு இடது கால் ஊனம், வலது கால் வாதம் ஆகிய குறைபாடுகள் மட்டுமே உள்ளது என்றாலும், உடலில் ஏதேனும் பாதிப்பு இருக்குமா? என கண்டறியும் வகையிலும், உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையிலும் யானையின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சென்னை டாக்டர் குழுவினர் சேகரித்து எடுத்து சென்றனர். படுத்த படுக்கையாகி 25 நாட்களாக உயிருக்கு போராடி வரும் யானை ராஜேஸ்வரிக்கு, வாதம் மற்றும் புண்ணை குணமாக்கி எழுந்து நிற்க செய்வது என்பது எளிதான காரியம் அல்ல எனவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.