மின்மாற்றியில் பழுது இருளில் மூழ்கிய காமராஜ் நகர் இரவு முழுவதும் பரிதவித்த மக்கள்

மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக காட்கோபர் காமராஜ் நகர் இருளில் மூழ்கியது. இரவு முழுவதும் மின்சாரம் இன்றி மக்கள் பரிதவித்தனர்.

Update: 2018-03-29 22:00 GMT
மும்பை,

மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக காட்கோபர் காமராஜ் நகர் இருளில் மூழ்கியது. இரவு முழுவதும் மின்சாரம் இன்றி மக்கள் பரிதவித்தனர்.

மின்மாற்றியில் பழுது

மும்பை காட்கோபர் கிழக்கில் உள்ள காமராஜ் நகரில் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் காமராஜ் நகர் குடிசை பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இங்குள்ள குடிசை வீடுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மின்சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 12 மணியளவில் திடீரென அங்குள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது.

மக்கள் அவதி

இதன் காரணமாக மின்வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. காமராஜ் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. மின்சாரம் உடனே வந்து விடும் என கருதிய குடியிருப்புவாசிகளுக்கு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது வெகுநேரத்திற்கு பிறகு தான் தெரியவந்தது. பகலில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு மின்சாரம் தடைபட்டதால் மக்கள் புழுக்கத்தாலும், கொசுக் கடியாலும் தூங்க முடியாமல் பரிதவித்தனர்.

பல வீடுகளில் பச்சிளம் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டிருந்தன.

பரிதவிப்பில் கழிந்த இரவு

ஏராளமானவர்கள் புழுக் கத்திற்கு பயந்து காமராஜ் சாலையில் வந்து உலாவி கொண்டிருந்தனர். பலர் விடிய, விடிய தூங்காமல் அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்ததை காண முடிந்தது. காமராஜ் நகர் மக்களின் நேற்றுமுன்தினம் இரவு பொழுது பெரும் பரிதவிப்பில் கழிந்தது.

இந்த நிலையில், நேற்று காலை ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்கள் வந்து மின்மாற்றி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மாலை வரையிலும் மினிவினியோகம் வழங்கப் படவில்லை. இதனால் மிக்சி, வாஷிங்மெஷின், அயன்பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்தி செய்யும் வேலைகளை செய்ய முடியவில்லை. குடிதண்ணீர் கூட பிடிக்க முடியாமல் போனது.

மேலும் செய்திகள்