‘ஓம் நமசிவாய’ முழக்கத்துடன் மயிலாப்பூரில், அறுபத்து மூவர் உலா கோலாகலம்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் உலா கோலாகலமாக நடந்தது.

Update: 2018-03-30 00:15 GMT
சென்னை, 

சென்னையில் உள்ள சைவத்தலங்களில் முக்கியமாக விளங்கக்கூடியது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். ‘கயிலையே மயிலை... மயிலையே கயிலை...’ என்று போற்றப்படும் இத்தலத்தில் பங்குனி பெருவிழா 22-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கபாலீஸ்வரரை, அறுபத்து மூவர் நாயன்மார்களுடன் ஒரு சேர, தரிசனம் செய்யும் இந்த நிகழ்வை காண சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர். இதனால் மயிலாப்பூர் விழாக்கோலம் பூண்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தண்ணீர், மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டு இருந்தன. பெண்கள் பலர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து படைத்தனர். பக்தர்களின் வசதிக்காக நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நாயன்மார்கள் உலா

பகல் 3 மணிக்கு மேளம், தாளம் முழங்க அறுபத்து மூவர் உலா தொடங்கியது. விநாயகர் பல்லக்கில் முன்னே சென்றார். அதனை தொடர்ந்து கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் எழுந்தருளினர். வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர், முண்டக கன்னியம்மன், அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரர் சாமிகள் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளினர். பின்னர் அறுபத்து மூவர் நாயன்மார்கள் பல்லக் குகள், சைவக்குறவர்கள் பல்லக்குகள் சென்றன.

கிராமத்து காவல் தெய்வமான கோலவிழியம்மன் பல்லக்கு வந்தபோது, பக்தர்கள் தங்களின் குழந்தைகளை கொடுத்து ஆசி பெற்றனர். பல்லக்கில் வந்த அறுபத்து மூவர் நாயன்மார்கள், வெள்ளி விமான பல்லக்கில் வந்த கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரை பார்த்தபடியே 4 மாட வீதிகளில் உலா வந்தனர். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் தனித்தனி பல்லக்குகளில் வலம் வந்தனர்.

இன்று பங்குனி உத்திரம்

4 மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’, ‘தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று முழக்கமிட்டவாறு சாமி தரிசனம் செய்தனர். மாட வீதிகளை கடந்து வந்த பல்லக்குகள் இரவில் பதினாறு கால் மண்டபத்தை அடைந்தது.

அறுபத்து மூவர் உலாவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. குல தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள் என்பதால் கபாலீஸ்வரர் கோவில் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் களிலும் சிவன், முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 

மேலும் செய்திகள்