மணலி பகுதியில் இருந்து வெளியாகும் பெட்ரோலிய கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

மணலியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியாகும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2018-03-29 23:30 GMT
சென்னை,

மனிதன் வாழ உணவும், காற்றும், நீரும் மிகவும் இன்றியமையாத சக்திகளாகும். நீர் இல்லாமல் கூட சில நாட்கள் வாழ்ந்து விடலாம். ஆனால், காற்று இல்லாமல் ஒரு நொடிப்பொழுது கூட வாழ முடியாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது காற்று.

பொதுவாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இயற்கை எழிலுடன் வாழ்வதுடன், சுத்தமான காற்றையும் சுவாசித்து கொண்டிருப்பார்கள். ஆனால் வேலைக்காகவும், படிப்புக்காகவும் நகர்புறத்தை நோக்கி கிராம மக்கள் படையெடுத்ததன் விளைவு சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள்தொகை அதிகரித்து விட்டது.

காற்று மாசு

இதனால், கார், மோட்டார்சைக்கிள் போன்ற வாகன போக்குவரத்துகள் அதிகமாகின. இவற்றில் இருந்து வெளியாகும் புகையால் காற்று பெருமளவு மாசுபடுகிறது. இது ஒருபுறம் இருக்க சென்னையின் வடபகுதியான மணலியில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியாகும் கழிவுகளாலும் காற்று மாசுபடு கிறது.

இங்குள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு உயர்ரக கோபுரங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும் பெட்ரோலிய கழிவுகள் கழிவுநீர் ஓடைகளில் கலக்கிறது. இதனால் மணலியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அமைந்துள்ள கொடுங்கையூர், ஆர்.வி.நகர், பார்வதி நகர், செந்தில் நகர், சீதாராமன் நகர், மூலச்சத்திரம், மாதவரம் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட சில நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காற்று பெருமளவு மாசுபடுகிறது.

நோய்களுக்கு வாய்ப்பு

ஆனால், அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் பெட்ரோல் வாசனை கலந்த காற்றை சுவாசித்து பழகி விட்டனர். இவர்களுக்கு தங்கள் பகுதி காற்று மாசுபடுவது தெரிவது இல்லை.

ஆனால், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வரும் சல்பர்-டை-ஆக்சைடு போன்ற கழிவுகளால் ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்களும், தோல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

எனவே, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து காற்று மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சில மாதங்களுக்கு முன் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் முகமூடி அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது போன்ற நிலைமை சென்னையிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் செய்திகள்