மின்சார ரெயிலில் பட்டா கத்திகளுடன் ரகளை; கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
மின்சார ரெயிலில் பட்டா கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. அப்போது என்ஜின் பகுதியில் இருந்து 3-வது பெட்டியில் இருந்த வாலிபர்கள் சிலர், கூச்சலிட்டு ரகளை செய்தனர். இதனை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பார்த்தார்.
ஆனால் போலீசார் ரெயிலில் ஏறுவதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது. உடனே இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மூர்மார்க்கெட் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பட்டா கத்திகள்
பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்குள் அந்த ரெயில் நுழைந்ததும், போலீசார், வாலிபர்கள் ரகளை செய்த 3-வது பெட்டியில் ஏறினார்கள். போலீசாரை பார்த்ததும், அந்த வாலிபர்கள் தாங்கள் வைத்து இருந்த ‘பேக்’ ஒன்றை தூக்கி வெளியே வீசினார்கள். உடனே 3 வாலிபர் களை போலீசார் பிடித்தனர்.
அதற்குள் ரெயில் பெட்டியில் இருந்த மற்ற வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து வாலிபர்கள் தூக்கி வீசிய ‘பேக்’கை போலீசார் எடுத்து பார்த்தனர். அதில் 4 பட்டா கத்திகளும், பட்டாசுகளும், தீப்பெட்டியும் இருந்தன.
கோஷ்டி மோதலுக்கு திட்டமா?
அதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 பேரையும் மூர்மார்க்கெட் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கவியரசு (வயது 19), மருதுபாண்டியன் (19), சோமசுந்தரம் (19) என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட மாணவர்களும், தப்பி ஓடிய மாணவர்களும் கும்மிடிப்பூண்டி, அத்திப்பட்டு, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப் படுகிறது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் எதற்காக பட்டா கத்திகளுடன் ரெயிலில் ரகளையில் ஈடுபட்டார்கள்?, கோஷ்டி மோதலுக்கு எதுவும் திட்டமிட்டு இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.