எடியூரப்பாவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு பா.ஜனதாவில் சேரப்போவதாக அறிவிப்பு

எடியூரப்பாவுடன் திடீரென்று காங்கிரசை சேர்ந்த மாலிகையா குத்தேதார் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்து பேசினார்.;

Update: 2018-03-29 21:30 GMT
பெங்களூரு,

எடியூரப்பாவுடன் திடீரென்று காங்கிரசை சேர்ந்த மாலிகையா குத்தேதார் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் பா.ஜனதாவில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.

கட்சி தாவல்களும்...


கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த நிலையில் கட்சி தாவல்களும் நடந்து வருகின்றன. மந்திரி பதவி கிடைக்காததால் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாலிகையா குத்தேதார் எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவரை சமாதானப்படுத்த அவருக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

ஆயினும் மந்திரி பதவி வழங்கவில்லை என்ற கோபம் அவருடைய மனதில் இருந்தது. அதை அவர் வெளிப் படுத்தாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை மாலிகையா குத்தேதார் எம்.எல்.ஏ. நேற்று திடீரென சந்தித்து பேசினார். பா.ஜனதாவில் சேர உள்ளது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் மாலிகையா குத்தேதார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அநீதி இழைக்கப்பட்டது

நான் எடியூரப்பாவை சந்தித்து பேசினேன். பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளேன். காங்கிரசில் நேர்மையானவர்களுக்கு மதிப்பு இல்லை. எனக்கு மந்திரி பதவியை வழங்கவில்லை. காங்கிரசில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. காங்கிரஸ் இல்லாத நாடு உருவாகி வருகிறது. காங்கிரசில் தலைவர்களின் கார் கதவை திறந்து விடுபவர்களுக்கு பதவி கிடைக்கிறது.

என்னை விட அனுபவத்தில் குறைந்தவரான பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி கொடுத்தனர். பிரியங்க் கார்கே ஒரு சிறுவன். அவரை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. நான் எந்த நிபந்தனையும் விதிக்காமல் பா.ஜனதாவில் சேருகிறேன். பா.ஜனதா கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன். சபாநாயகர் பெங்களூருவில் இல்லாததால் அவர் வந்தவுடன் ராஜினாமா கடிதம் வழங்குவேன்.

இவ்வாறு மாலிகையா குத்தேதார் கூறினார்.

உரிய மரியாதை

இதையடுத்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறுகையில், “எந்த நிபந்தனையும் விதிக்காமல் பா.ஜனதாவில் சேருவதாக மாலிகையா குத்தேதார் என்னிடம் கூறினார். அரசியலில் அவர் அதிக அனுபவம் உள்ள ஒரு தலைவர். அவரை மகிழ்ச்சியோடு எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்கிறேன். நிபந்தனை விதிக்காவிட்டாலும், கட்சியில் அவருக்கு உரிய மரியாதை வழங்குவோம்“ என்றார்.

மேலும் செய்திகள்