மோட்டார்சைக்கிள் திருடியவருக்கு தர்ம அடி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-03-29 22:15 GMT
ஆரணி,

ஆரணியை அடுத்த அடையபுலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் அசோக்குமார். இவர், தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் ராட்டினமங்கலம் கூட்ரோட்டில் உள்ள வங்கிக்கு பணம் செலுத்த வந்திருந்தார். வங்கி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்று பணம் செலுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை ராட்டினமங்கலம் பைபாஸ் சாலை அருகே மர்ம நபர் ஒருவர் தள்ளிச்சென்றதை, மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பார்த்துவிட்டு கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்ற நபரை பிடித்து விசாரித்தபோது, அதை திருடியது தெரியவந்தது.

கைது

அதைத் தொடர்ந்து அந்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவில் உள்ள அறவஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 35) என்பதும், இவர், மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்