ஏ.சி. வெடித்து தீக்காயம் அடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு

ஏ.சி. வெடித்து தீக்காயம் அடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2018-03-29 22:00 GMT
வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி பகுதி-2, 12-வது தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 80), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் மற்றும் மருமகள் வீட்டின் முதலாவது மாடியிலும், வீராசாமி தரை தளத்திலும் வசித்து வந்தனர். கடந்த 27-ந் தேதி இரவு வீராசாமி வீட்டின் அறையில் ஏ.சி. போட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் ஏ.சி. திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரத்தில் வீராசாமி படுத்திருந்த மெத்தையின் மீதும் தீப்பற்றியது. இதில் அவரின் உடலின் பல்வேறு இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. வீராசாமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அறைக்கதவை உடைத்து தீக்காயத்துடன் இருந்த வீராசாமியை மீட்டனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர் அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் நள்ளிரவு வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்