அனகாபுத்தூர் பகுதியில் கார் பேட்டரிகளை திருடிய 2 வாலிபர்கள் கைது

அனகாபுத்தூர் பகுதியில் கார் பேட்டரிகளை திருடியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-29 22:15 GMT
தாம்பரம், 

அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் சமீபகாலமாக சாலையோரம் நிறுத்தப்படும் கார்களின் பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச்செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அனகாபுத்தூர் அணுகுசாலையில் ஒரு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் ஏராளமான கார் பேட்டரிகள் இருந்தன.

2 பேர் கைது

ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் அனகாபுத்தூர் ஸ்டாலின் நகரை சேர்ந்த வீரமணி (வயது 21), நாகல்கேணியை சேர்ந்த சிவா என்கிற சிவகுமார் (22) என்பதும், இருவரும் அனகாபுத்தூர் பகுதியில் நிறுத்தப்படும் கார்களில் பேட்டரிகளை திருடி விற்றதும் தெரியவந்தது.

காலையில் ஆட்டோ ஓட்டும் இவர்கள், இரவில், கார் பேட்டரிகளை திருடி வந்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கார் பேட்டரிகள், ஆட்டோ மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்