பட்டுக்கோட்டை-காரைக்குடி புதிய வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரெயில்

பட்டுக்கோட்டை- காரைக்குடி புதிய வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் இயக்கப் படுகிறது.

Update: 2018-03-29 22:30 GMT
தஞ்சாவூர்,

காரைக்குடி-திருவாரூர் மீட்டர்கேஜ் பாதையை அகற்றி விட்டு அதற்கு பதில் அகல ரெயில்பாதை அமைப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.700 கோடி செலவில் அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.

பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை பணிகள் நடைபெற்று முடிந்ததையடுத்து காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே கடந்த 1-ந் தேதி அதிவேக ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பயணிகள் சிறப்பு ரெயில்

இதையடுத்து முதல்கட்டமாக பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கும், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

காரைக்குடியில் இருந்து இந்த சிறப்பு ரெயில் காலை 10 மணிக்கு புறப்பட்டு கண்டனூர் புதுவயலுக்கு 10.12 மணிக்கும், பெரியகோட்டைக்கு 10.25 மணிக்கும், வாளரமாணிக்கத்திற்கு 10.38 மணிக்கும், அறந்தாங்கிக்கு 11.03 மணிக்கும், ஆயிங்குடிக்கு 11.18 மணிக்கும், பேராவூரணிக்கு 11.45 மணிக்கும், ஒட்டங்காடுக்கு 12.13 மணிக்கும், பட்டுக்கோட்டைக்கு மதியம் 1 மணிக்கும் வந்து சேருகிறது.

மறுமார்க்கமான பட்டுக்கோட்டையில் இருந்து இந்த ரெயில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு ஒட்டங்காட்டிற்கு 3.35 மணிக்கும், பேராவூரணிக்கு 4 மணிக்கும், ஆயிங்குடிக்கு 4.30 மணிக்கும், அறந்தாங்கிக்கு 4.45 மணிக்கும், வாளரமாணிக்கத்திற்கு 5.14 மணிக்கும், பெரியகோட்டைக்கு 5.26 மணிக்கும், கண்டனூர் புதுவயலுக்கு 5.37 மணிக்கும், காரைக்குடிக்கு 6 மணிக்கும் சென்றடைகிறது.

இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்