மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் தகவல்

கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Update: 2018-03-29 22:45 GMT
கரூர்,

கரூர் நாரதகானசபாவில் மண்டல கலைபண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பில் தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி அரசு இசைப்பள்ளியில் பயின்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி இசை கலைஞர்களை கவுரவித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 4 இசை கல்லூரிகளும், 17 அரசு இசைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. தமிழும், இசையும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான்.

அதற்கு தாலாட்டு சிறந்த உதாரணம். வாழ்வே ஒரு இசை பயணம் தான் இன்றைய ‘வாட்ஸ்-அப்’காலத்தில் நல்ல இசைகளை கேட்டு மன அழுத்தத்தை போக்கி கொள்ளவேண்டும். தற்போது கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுத்து, அதில் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மண்டல கலை பண்பாட்டு மைய இணை இயக்குனர் குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, நாரதகானசபா நிர்வாகிகள் சூர்யநாராயணன், வித்யாசாகர், ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்