உணவு கொடையளித்த தமிழர்கள்

நாளை (மார்ச் 30-ந்தேதி) உலக இட்லி தினம்.

Update: 2018-03-29 06:00 GMT
உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய உணவு வகைகளில் முதலிடம் பெறுவது இட்லி. இட்லி தோன்றிய வரலாறு சரியாக அறிய முடியவில்லை. ஆனால் இட்லி தோன்றிய இடம் தமிழகம் என்பது ஆய்வாளர்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்றும் பெரும்பாலான தமிழர்களின் காலை உணவாக இட்லி இருப்பதுதான் அதற்கு சரியான சான்று.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியத்தில் இட்லி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அது மட்டுமல்ல, அது வேறு எந்த உணவையும்போல வயிற்றுக்குப் பாரமாகவோ, உடலுக்கு கேடாகவோ இருப்பதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆவியில் வேக வைத்து உணவு தயாரிக்கும் முறை தமிழர்களிடம் இருந்துதான் மற்றவர்களுக்குப் பரவியதாகவும் அறிய முடிகிறது. அனைத்து உணவுகளுக்கும் தாய் உணவு இட்லி என்ற பேச்சும் உண்டு. ஆம், பெரும்பாலான தமிழ்த் தாய்மார்கள் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் முதல் உணவு இட்லிதான். தாய்ப்பால் எப்படி குழந்தைகளுக்கு தீமை செய்யாமல் ஆரோக்கியம் வளர்க்குமோ, அப்படியே இட்லியும் குழந்தைகளுக்கு ஆகாரமாக இருந்து ஆரோக்கியத்தை பெருக் கும் என்பது நமது நம்பிக்கை.

அது சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சீக்கு வந்து படுத்திருக்கும் பெரியவர்களுக்கும், ஜீரணக் கோளாறு ஏற்பட்ட சகல வயதினருக்கும், உடல் உறுதி தேவைப்படும் இளைஞர் பட்டாளத்துக்கும் ஏற்றது. அதனால் தான் இன்றைக்கும் தமிழர்களின் சமையலறையில் அசைக்க முடியாத இடத்தை இட்லி பிடித்திருக்கிறது. தாய்மார்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் சுவையாக, விதவிதமாக இட்லி செய்து கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அன்று நாம் அறிந்த இட்லியின் பெருமையையும், அது வழங்கிய ஆரோக்கியத்தின் அருமையையும், இன்று உலகமே அறிந்துவிட்டது. அதனால்தான் நாளைய தினம் உலக இட்லி தினமாக அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கிறது. இட்லிக்கு அந்த பெருமை வர முக்கிய காரணம் அது மிக எளிதாக ஜீரணமாகக்கூடியது என்பதுதான். அதனால்தான் பெரும்பாலான நோயாளிகளுக்கு இட்லியை உணவாகத் தர மருத்துவர்களே ஊக்குவிக்கிறார்கள்.

இப்போதெல்லாம் விதவிதமாக இட்லி கிடைக்கிறது. இணையத்தில் தேடினால் 2 ஆயிரத்துக்கும் மேல் இட்லி வகைகள் இருப்பதாக அறிய முடிகிறது. தனியே இட்லியை மட்டும் வியாபாரம் செய்யும் புகழ்பெற்ற ஓட்டல்கள் இருக்கின்றன. எத்தனை பெருமை கொண்டிருந்தாலும் இட்லிக்கு கவர்ச்சியோ, சுவையோ கிடையாது. இட்லிக்கு தனியே சுவை இல்லாவிட்டாலும், அதனுடன் ஜோடி சேரும் சட்னி, பொடிக்கு இணையான காம்பினேசனை எத்தனை ஜங் புட் வந்தாலும் அடிச்சுக்க முடியாது.

எத்தனை வகை இட்லி இருந்தாலும் கருப்பு இட்லிதான் மிக மிக ஆரோக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உளுந்தை ஊறவைத்து ஆட்டுக்கல்லில் ஆட்டும்போது அம்மாவுக்கு ஒத்தாசையாக ஒதுங்கும் மாவை ஒரு கையால் தள்ளிய அனுபவத்தை மறக்க முடியாது. தோலெடுக்காத உளுந்தை ஆட்டி இட்லி செய்தால் இன்றிருப்பதுபோல பளர் வெண்மையில் இட்லி இருக்காதுதான்.

சற்றே பழுப்பேறிய நிறத்தில் அல்லது சற்று கருப்பு நிறத்தில் காணப்படும். அந்த இட்லிதான் நல்ல ஆரோக்கியமானது என்பது உண்மை. எனவே இந்த இட்லி தினத்தில் கருப்பு இட்லியை வெறுக்காமல் சாப்பிட சபதம் எடுத்தால் நமக்குத்தான் நல்லது.

ஆரோக்கிய இட்லிக்காக அதிகமாக உளுந்து சேர்த்தால், மல்லிப்பூ இட்லி, மல்லுக்கட்டி சாப்பிடும் கல்லு இட்லியாக மாறிவிடும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். நாலுக்கு ஒரு பங்கு உளுந்து, நான்கு மணி நேரத்திற்கும் குறைவாக ஊறவைத்த மாவுதான் இட்லிக்கு ஏற்றது என்பதை மனதில் பதிய வையுங்கள்.

இட்லி தமிழர்கள் உணவு என்பதால் இட்லி தினத்தை தமிழர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் இட்லியை பிரபலப்படுத்தும் விதமாக வகை வகையாய் இட்லி செய்து கண்காட்சி நடத்தி இட்லி தினம் கொண்டாடுகிறார்கள். நாமும் இட்லியின் பெருமையை உணர்ந்து புசிப்போம். ஆரோக்கியத்துடன் இருப்போம்.

-கருப்பழகி

மேலும் செய்திகள்