ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு முதியவரிடம் ரூ.95 ஆயிரம் திருட்டு

கிளாம்பாக்கத்தில் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு முதியவரிடம் ரூ.95 ஆயிரம் திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-03-28 23:21 GMT
வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி கிளாம்பாக்கம் தேவேந்திரநகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 61). இவர் நேற்று மதியம் ஊரப்பாக்கம் கனரா வங்கி கிளையில் ரூ.95 ஆயிரம் எடுத்துக் கொண்டு தனது மொபட்டில் உள்ள இருக்கையின் அடியில் வைத்தார்.

பின்னர் அங்கிருந்்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். கிளாம்பாக்கம் கோலாச்சியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த 2 வாலிபர்கள் துரைசாமியை பார்த்து உங்கள் பணம் சாலையில் சிதறிக்கிடக்கிறது என்று கூறினர். உடனே துரைசாமி சாவியோடு மொபட்டை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையில் சிதறி கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்தார்.

திருட்டு

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் மொபட் இருக்கையின் அடியில் இருந்த ரூ.95 ஆயிரத்தை எடுத்தனர். இதைப் பார்த்த முதியவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள். ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு துரைசாமியின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் பணத்தை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் செய்திகள்