100 பேருக்கு விலையில்லா மாடுகள்
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கம்மராஜபுரம், இளையனார்வேலூர், காவாந்தண்டலம் ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவிற்கு காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி நூர்முகமது தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு ரூ.35 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் 100 பேருக்கு விலையில்லா கறவை மாடுகளையும் ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 54 பேருக்கு விலையில்லா ஆடுகளையும் வழங்கினார்.
முன்னதாக வாலாஜாபாத் பேரூராட்சி பஸ் நிலையத்தில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை மூலம் வைக்கப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார். செய்தித்துறையின் மின்னணு விளம்பர வாகனம் மூலம் ஓராண்டு சாதனை செய்திமலர் ஒளி பரப்பப்பட்டதையும் பார்வையிட்டார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் சுந்தரராஜ், வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் சுமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.