பேரம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளின்றி காணப்படும் பஸ் நிலையம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பேரம்பாக்கத்தில் அடிப்படை வசதியின்றி காணப்படும் பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தபால் நிலையம், வேளாண்மை விற்பனை நிலையம், தீயணைப்பு நிலையம், கூட்டுறவு பால் விற்பனை நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை விற்பனைக் கிடங்கு போன்ற 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் இயங்கி வருகிறது. மேலும் பேரம்பாக்கத்தில் இருந்து தினந்தோறும் அரக்கோணம், காஞ்சீபுரம், சுங்குவார்சத்திரம், திருவள்ளூர், கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூந்தமல்லி, சென்னை போன்ற பகுதிகளுக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மப்பேடு, இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சின்னமண்டலி, பெரியகளகாட்டூர், சின்னகளகாட்டூர், சத்தரை என சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், வெளியூருக்கு செல்வதற்காகவும் பேரம்பாக்கத்திற்கு தினந்தோறும் வந்து செல்வார்கள். இதனால் பேரம்பாக்கத்தில் மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பேரம்பாக்கத்தில் பொதுமக்கள் பயன்பெற ஏதுவாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த 2007-08-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் கட்டப்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லை
இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் அமர ஏதுவாக இருக்கை வசதிகளும் , குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. மேலும் மின்விளக்கு வசதியும் செய்து தரப்படவில்லை. மேலும் இந்த பஸ் நிலையத்திற்கு சுற்றுசுவர் இல்லாததால் பலரும் பஸ் நிலையத்தில் அமர்ந்து மது குடிக்கின்றனர். பஸ் நிலையத்தில் ஆங்காங்கே மதுபாட்டில்களும், குடிநீர் பாட்டில்களும், பாக்கெட்டுகளும் வீசிவிட்டு செல்கின்றனர். குறிப்பாக கால்நடைகளும் பஸ்நிலையத்திற்குள் வருவதால் பயணிகள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இந்த பஸ் நிலையத்தின் எதிரில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த உயர்கோபுர மின்விளக்கும் சரியாக எரியாததால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளாக காணப்படுகிறது. அடிப்படை வசதி இல்லாமல் காணப்படும் பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.