போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தனர் ரவுடியை தாக்கியவர்களை தப்பிக்க விட்ட 5 பெண்கள் கைது
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, ரவுடியை தாக்கியவர்களை தப்பிக்க விட்டதாக 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 22). ரவுடியான இவர் மீது கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் குப்பை கிடங்கு எதிரே ரவி, எதிர் கோஷ்டியை சேர்ந்த ஒருவரை கையில் கத்தியுடன் விரட்டிச்சென்றார்.
இதை பார்த்த எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள், ரவியை மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் கத்தியால் அவரை வெட்டியதாகவும் தெரிகிறது.
போலீசாரை தடுத்தனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார், ரவியை மீட்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர், போலீசாரை அந்த பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
ஒரு வழியாக பெண்களை விலக்கி விட்டு உள்ளே புகுந்த போலீசார், படுகாயம் அடைந்த ரவியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ரவி அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
ஆனால் அங்கிருந்த பெண்கள், போலீசாரை முற்றுகையிட்டு ரவியை தாக்கிய கும்பலை கைது செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை அங்கிருந்து தப்பிக்க விட்டனர்.
5 பெண்கள் கைது
இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், ரவுடியை தாக்கியவர்களை தப்பிக்க விட்டதாக கூறி புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவி உத்தரவின்பேரில் கொடுங்கையூர் போலீசார் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த வாசுகி (45), செல்வி (30), பத்மா (40), அமுதா (45), மாரியம்மாள் (50) ஆகிய 5 பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரவுடி ரவியை தாக்கிவிட்டு தப்பி ஓடிய பா.ஜ.க. நிர்வாகி அம்பேத் (22), சதீஷ்குமார் (22), சாமிநாதன் (20), சாமி (22) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 10 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.