சாலைகளில் இடையூறாக விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சாலைகளில் விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை,
சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2018-19-ம் நிதியாண்டில் இருந்து அபராத தொகை ரூ.10 ஆயிரமும், ஒரு மாட்டுக்கு 3 தினங்களுக்கு பராமரிப்பு செலவு ரூ.750-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 500-ம், பிப்ரவரி மாதம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 850-ம், மார்ச் மாதம் (நடப்பு மாதம்) 28-ந்தேதி வரையில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 750-ம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு அடையாளமாக காதுமடலில் பெருநகர சென்னை மாநகராட்சி வரிசை எண்கள் அடிப்படையில் முத்திரை வில்லை பொருத்தப்படும். முத்திரை வில்லை பொருத்தப்பட்ட கால்நடைகள் மீண்டும் பிடிக்கப்பட்டால், அவைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரியமுறையில் ஒப்படைக்கப்படும். உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்புடன் மாடு பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.