அரியவகை கத்தாழை மீன்கள் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஏலம்

காரைக்கால் மீனவர் வலையில் சிக்கிய மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை கத்தாழை மீன்கள் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

Update: 2018-03-28 22:30 GMT
காரைக்கால்,

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அவர்களில், காரைக்கால் கீழகாசக்குடி மேட்டைச்சேர்ந்த விசைப் படகு மீனவர் ஒருவர் படகில், மருத்துவம் குணம் வாய்ந்த, அரிய வகை கத்தாழை மீன்கள் சுமார் 4 ஆயிரம் கிலோவுக்கு கிடைத்தன.

இந்த மீன்கள் ஆழ்கடலில் சுமார் 3 அல்லது 4 நாட்கள் தங்கி மிகவும் கடினப்பட்டு பிடித்தால் மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு மீன்களும் 3 அடி நீளம், 25 கிலோ எடையில் இருந்தது. கிலோ ரூ.2500-க்கு ஏலம் போனது. இந்த மீன்கள் அனைத்தும் நேற்று ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

இந்த வகை மீன்கள் செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை கத்தாழை மீன் எழுப்பும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த நெட்டியானது ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒருவகை வேதிப்பொருட்களை கொண்டதாகவும் ஒயின், ஜெல்லி மிட்டாய் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக இதை பயன்படுத்துவதாகவும், அதனால், மீன் ஏலம் எடுப்போர் இதனை சேமித்து தங்கத்தை போல் கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மீன்கள் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதியானது. 

மேலும் செய்திகள்