கூடலூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

கூடலூரில் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2018-03-28 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் சுப்பையன் சேர்வை தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் சலவைத் தொழிலாளி. கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கி சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள மொட்டனூத்தை சேர்ந்த செல்வம் மகள் பிரியா (வயது 21) என்பவருக்கும் கடந்த 1¼ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிரியாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதற்காக அவர் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய பெற்றோர் பிரியாவையும், குழந்தையையும் அழைத்து வந்து, கூடலூரில் உள்ள கணவர் வீட்டில் விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியா தனது செல்போனில் கணவர் ஜெயச்சந்திரனிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஒரு அறையில் பிரியா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவலறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலையில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரியாவின் உடலை வாங்க அவரின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அரசு மருத்துவமனை முன்பு கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கம்பம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் கணவர் ஜெயச்சந்திரனை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்