குடிக்க பணம் தராத மனைவியை வெட்டிக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

குடிக்க பணம் தராத மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;

Update: 2018-03-28 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 60). இவரது மனைவி முருகம்மாள் (55). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் வெளியூர்களில் வேலை செய்து வருகிறார்கள். பெருமாள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் முருகம்மாள் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி காலையில் குடிக்க பணம் கொடுக்குமாறு முருகம்மாளிடம், பெருமாள் கேட்டார். காலையிலேயே குடிக்க பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த முருகம்மாள், பணம் இல்லை என கூறிவிட்டு, அருகில் இருந்த விவசாய கிணற்றுக்கு துணி துவைக்க சென்றுவிட்டார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற பெருமாள், மீண்டும் பணம் கேட்டு முருகம்மாளை தொந்தரவு செய்தார். அவர் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகம்மாளின் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்தது. கொலை வழக்கில் நீதிபதி அன்புச்செல்வி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்