அ.தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை போலீசார் விசாரணை

திருச்செங்கோடு அருகே, அ.தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-28 23:00 GMT
எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்து உள்ள தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர் தறிப்பட்டறை நடத்தி வந்ததோடு, வட்டிக்கு பணம் விடும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சுமதி (45) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் இவர் தேவனாங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே செம்மக்கல்மேடு என்ற இடத்தில் நேற்று காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தது. அவர்கள் இவரை திடீரென வழிமறித்து தாங்கள் வைத்திருந்த பன்றியை அறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் குப்புசாமியின் வயிறு, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குப்புசாமி இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையறிந்த அவரது உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

குப்புசாமி என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வட்டிக்கு விடும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக யாராவது இவரை கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

நாமக்கல்லில் இருந்து போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து அங்கும், இங்கும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்