செய்யாறில் மாணவர் தற்கொலை: கலைக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்யாறில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-28 23:00 GMT
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தணிகைமலை (வயது 23), செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு 2-ம் ஆண்டு படித்து வந்தார். தணிகைமலையின் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டு கல்லூரி படிப்பை மேற்கொண்டதால் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆண்டு இறுதியில் தணிகைமலையின் வருகை பதிவேடு 41 சதவீதம் இருந்ததால் பல்கலைக்கழக தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது.

குறைந்தது 65 சதவீதம் வருகை பதிவேடு இருந்தால் தான் அபராத தொகையை செலுத்தி பல்கலைக்கழக அனுமதி பெற்று தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதிட அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. 41 சதவீதத்திற்கும் குறைவாக தணிகைமலை உள்பட 21 மாணவர்கள் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தணிகைமலை, துறை அலுவலரிடம் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த சென்றபோது, வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தணிகைமலை விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை செய்யாறு அரசு கலைக்கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தணிகைமலை தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் மூர்த்தியை (பொறுப்பு) மாணவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் மாணவர்கள் வரலாற்றுத்துறை அலுவலகத்தின் மீது கற்களை வீசினர். இதில் தகவல் பலகையின் கண்ணாடி உடைந்தது. இதனால் அலுவலகத்திற்குள் இருந்த வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கதவினை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மூர்த்தியிடம், தணிகைமலையின் தந்தை சரவணன், உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகை பதிவேடு பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது கல்லூரி முதல்வர் மூர்த்தி புகார் மனுவினை அனுப்பி வைத்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வருகை பதிவேடு குறைந்த மாணவர்கள் மருத்துவ சான்று பெற்று பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று தேர்வு எழுதிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனையடுத்து மாணவர்கள் மற்றும் தணிகைமலையின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் போராட்டத்தால் நேற்று நடக்க இருந்த இளங்கலை தாவரவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவு செய்முறை தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்