காணாமல் போன மாணவரை கடத்தி வைத்திருப்பதாக ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

காணாமல் போன கல்லூரி மாணவரை கடத்தி வைத்து இருப்பதாக கூறி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபரை செல்போனில் பேசி வரவழைத்து போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-28 22:45 GMT
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே கோட்டூர் குமரன்கட்டம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவருடைய மகன் பூபதி (வயது 21 ). இவர் வால்பாறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 14-ந் தேதி ஆழியாறு அணை பகுதியில் மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை பார்ப்பதற்காக பூபதி சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பூபதியை காண வில்லை என்று அவரது உறவினர்கள் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து இருந்தனர்.

இந்த நிலையில், பூபதியின் உறவினர் திருமலைசாமியின் செல்போனில் மர்மநபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், பூபதியை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.2 லட்சம் கொடுத்தால் அவரை விட்டு விடுவதாகவும், போலீசுக்கு தகவல் தெரிவித்தால் பூபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டு தான் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை போடுமாறு கூறியுள்ளார். உடனே திருமலைசாமி முதல்கட்டமாக ரூ.6 ஆயிரத்தை ஜெகதீஷ் என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தினார். மீதி தொகையை வாங்க ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருமாறு திருமலைசாமி கூறினார். அதன்படி அந்த மர்மநபர் வந்தபோது பூபதி அவருடன் இல்லை. இது பற்றி கேட்ட போது பணத்தை கொடுத்தால்தான் அவரை காட்டுவேன் என்று கூறி உள்ளார். இதனால் திருமலைசாமி மற்றும் உறவினர்கள், பூபதியை காட்டினால் தான் பணத்தை கொடுப்போம் என்று கூறியுள்ளனர். உடனே பூபதியை அழைத்து வருவதாக கூறி விட்டு சென்ற அந்த மர்மநபர் நீண்டநேரமாகியும் வரவில்லை. இதனால் பூபதியின் உறவினர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி வந்து விட்டனர்.

இது குறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் திருமலைசாமி புகார் கொடுத்தார். பின்னர் போலீசார் கூறிய அறிவுரைப்படி, திருமலைசாமி அந்த மர்ம நபரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, கேட்ட பணத்தை தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று காலை அந்த மர்ம நபர், திருமலைசாமியை தொடர்பு கொண்டு பூபதியை ஆழியாறு அணைக்கு அழைத்து வருகிறேன். நீங்கள் பணத்துடன் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் திட்டமிட்டபடி அந்த மர்ம நபரை சுற்றி வளைக்க முடிவு செய்தனர். இதற்காக அந்தமர்ம நபரின் செல்போன் அழைப்பை கண்காணித்தனர். அவர், ஆழியார் அணைப்பகுதிக்கு வந்ததும், போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பதும், பத்திரிகையில் காணவில்லை என்ற விளம்பரம் இருந்ததை பார்த்து, அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஜெகதீஷ், இது போல் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது திருப்பூர், தாராபுரம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெகதீசை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத் தனர். 

மேலும் செய்திகள்