ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பு தெரிவிக்க மாட்டேன்: முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பு தெரிவிக்க மாட்டேன் என்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் கூறினார்.

Update: 2018-03-28 23:00 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் வேதாத்திரிய வேள்வி தினம் நேற்று நடைபெற்றது. இதற்கு அறிவுத்திருக்கோவில் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முன்னதாக இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி வரவேற்று பேசினார். இதையொட்டி பார்முழுவதும் உணவு நீர் பொதுவாக்கல் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேதாத்திரி மகரிஷி நமக்கு நல்ல எண்ணங்களை சொல்லி கொடுத்து உள்ளார். அவற்றை இங்கு உள்ளவர்கள் நல்ல முறையில் செயல்படுத்தி வருகின்றனர்.

தண்ணீருக்காக போர் வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நீர், நிலம், உணவு நமக்கு சரியாக கிடைக்க வேண்டும். உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உணவு, தண்ணீர் இன்று கேள்விகுறியாகி விட்டது. நதிநீர் இணைப்பை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். தற்போது 130 கோடி மக்கள் தொகை உள்ளது.

இது 2050-ம் ஆண்டில் 150 கோடியாக அதிகரிக்கலாம். நதிநீரை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாக்க முடியும். அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நதிநீரை இணைக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் பண்பாட்டு கல்வி என்ற தலைப்பில் பேசினார். அதை தொடர்ந்து பேராசிரியர்கள் தங்கவேலு, அமுதா ராமானுஜம், பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

முடிவில் உலக சமுதாய சேவா சங்க பொதுச்செயலாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேட்டதற்கு, தண்டனை காலத்தில் எந்த குற்றமும் செய்யாத நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கு நான் மறுப்பு தெரிவிக்க மாட்டேன் என்று பதில் அளித்தார். 

மேலும் செய்திகள்