ஜெயங்கொண்டத்தில் பயங்கரம் பேரூராட்சி செயல் அதிகாரி மனைவி கத்தியால் குத்தி கொலை

ஜெயங்கொண்டத்தில், பேரூராட்சி செயல் அதிகாரியின் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-03-28 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலா யுதம் நகர் 5-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் குண சேகரன் (வயது 50). இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாரதி (45). இவர்களுக்கு ஆதித்யன் (12) என்ற மகனும், ஆர்த்தி (14) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டனர். குணசேகரன் திட்டக்குடிக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

தினமும் மாலையில் பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளை வீட்டுக்கு பாரதி அழைத்து வருவார். இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் பாரதி வராததால் அவரது குழந்தைகள் வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. பூட்டிய நிலையில் இருந்தது. பின்னர் அவர்கள் சமையல்கூடம் ஜன்னல் வழியாக பார்த்த போது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் விரைந்து வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாரதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

பாரதியின் கழுத்தில் கத்தி குத்தும், பின்புறம் தலையில் பலத்த காயமும் இருந்தது. மேலும் பாரதியின் கழுத்தில் கிடந்த தாலி உள்பட 15 பவுன் நகை காணாமல் போயிருந்தது. வீட்டில் இருந்த அனைத்து பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து இருந்தன. பீரோவில் இருந்த நகை மற்றும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. ஆனால் எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த பாரதியை நோட்டமிட்டு அவரை கொலை செய்து நகையை கொள்ளையடித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மேலும் தனியாக வீட்டில் இருந்த பாரதியை தாக்கி பாலியல் பலாத்கார முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு பின்னர் அவரை கொலை செய்திருக்கலாமா? அல்லது முன்விரோத பிரச்சினையில் பாரதி கொல்லப்பட்டாரா? அல்லது நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்