34 பஞ்சாயத்துகளில் செயலர் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு ஏப்ரல் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 34 கிராம பஞ்சாயத்துகளின் செயலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஏப்ரல் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-03-28 20:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 34 கிராம பஞ்சாயத்துகளின் செயலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஏப்ரல் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

34 பஞ்சாயத்து செயலர்

நெல்லை மாவட்டத்தில், தென்காசி, செங்கோட்டை, களக்காடு மற்றும் பாப்பாக்குடி பஞ்சாயத்து யூனியன்கள் தவிர ஏனைய பஞ்சாயத்து யூனியன்களுக்கு உள்பட்ட 34 பஞ்சாயத்துகளில் செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள், வருகிற 13-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட தனி அலுவலர்கள்/வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம்(கிராம பஞ்சாயத்து) விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள் என்ன?

விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிக்குள் வசிப்பவராகவும், அதே பஞ்சாயத்து யூனியனில் அந்த பஞ்சாயத்தின் எல்லையை ஒட்டிய பஞ்சாயத்துகளில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 18 வயது முடிந்தும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முடிந்தும் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாயத்து செயலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான இதர தகுதிகள், பஞ்சாயத்து செயலர் காலிப்பணியிடங்களின் விபரம், இன சுழற்சி, இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.tirunelveli.nic.in இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் 13-ந் தேதி வரை மேற்படி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்..

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 13-ந் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் சம்பந்தப்பட்ட தனி அலுவலர்கள்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்சாயத்து) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்