உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் கவர்னர் பேச்சு

உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

Update: 2018-03-28 23:00 GMT
திருச்சி,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். வரவேற்பு முடிந்த பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சி கே. சாத்தனூரில் உள்ள அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிக்கு சென்றார்.

அங்கு நடைபெற்ற 15-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் 247 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் தமிழக கவர்னர் ஆக பொறுப்பேற்று 6 மாதங்களாகி விட்டது. கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதை காண்கிறேன். தமிழகத்தில் பள்ளி இடை நிற்றல் என்பது மிகவும் குறைவாக உள்ளது. அதே போல் தமிழகத்தில் 30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. 45 சதவீத குழந்தைகள் பள்ளி கல்வி முடித்து உயர் கல்விக்கு செல்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் அதிக அளவில் இருப்பதால் இவை மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என பேசப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் மற்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

பெண்களின் சக்தி மிகவும் உயர்வானது. தமிழகத்தை சேர்ந்த பெண்கள் சங்க காலம் தொட்டே இலக்கியம், ஆன்மிகம், ஆட்சி, அதிகாரங்களில் சாதனை படைத்து இருப்பதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இன்று நமது நாட்டில் பாதுகாப்பு துறை, மருத்துவம், இலக்கிய துறைகளில் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். கல்வி மட்டுமே நிலையான சொத்து. நமது நாட்டில் உயர் கல்வியை போதிக்கும் 800 பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. உயர் கல்வி அமைப்பில் இது உலக அளவில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

எனவே பெண்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி பயில வேண்டும். தன்னம்பிக்கையுடன் படித்தால் உலகமே உங்கள் கையில் தான். பெண்களின் சக்தி என்ன என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. எனவே பிறரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிறைய புத்தகங்கள் படித்து அறிவை பெருக்கி கொள்ளுங்கள். மகாத்மா காந்தி போதனையின் படி எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் தொடக்கத்தில் கல்லூரி செயலாளர் ஹபிபுல்லா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுபத்ரா ஆண்டறிக்கை படித்தார். கல்லூரி நிர்வாக குழு தலைவர் ஜெய்லானி சம்சுதீன், துணை தலைவர் அசன் அகமது, பொருளாளர் அகமது குத்புதீன் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் காதர் பக்‌ஷ் உசேன், சையது ஜகுபர், அக்பர் கான், அப்துல் மஜீத், அன்சாரி பாட்சா மற்றும் முக்கிய பிரமுகர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தாளாளர் சாகுல் அமீது நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்