தனியார் மருத்துவமனையில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை டாக்டர் உள்பட 3 பேர் கைது

மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையொட்டி டாக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2018-03-28 23:15 GMT
மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள முத்துக்குடாவை சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மகள் தாயம்மாள்(வயது 22). இவர் மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல தாயம்மாள் ஆஸ்பத்திரிக்கு இரவு பணிக்கு வந்தார். வழக்கமாக பணி முடிந்து அவர் காலையில் ஊருக்கு சென்று விடுவார்.

இந்நிலையில் மருத்துவமனையில் நர்சு தாயம்மாள் இருந்த அறை வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை காவலாளி மாரிமுத்து(48) நேற்று அதிகாலை அந்த அறையை திறந்து பார்த்தார். அந்த அறையில் நர்சு தாயம்மாள் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்த டாக்டர்களிடம் கூறினார். இதையடுத்து டாக்டர்கள் மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தாயம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தாயம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, தாயம்மாளின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மணமேல்குடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தாயம்மாளின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் முத்து (65), மருத்துவமனை காவலாளி மாரிமுத்து, மருத்துவமனை ஆம்புலன்சு டிரைவர் மணிகண்டன் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். நர்சு தாயம்மாளின் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்