ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-28 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.குமரெட்டியாபுரம் பெண்கள் கொளுத்தும் வெயிலில் முட்டிப்போட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அ.குமரெட்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த கடையடைப்பு மற்றும் கண்டன பொதுக்கூட்டம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஏராளமான பொதுமக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதால் தூத்துக்குடி ஸ்தம்பித்தது.

மாணவர்கள் தர்ணா

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது. கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அமர்நாத் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடக்கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் திடீர், திடீரென போராட்டம் நடத்தி வருவதால் கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முட்டிப்போட்டு ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று 45-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நேற்று மரத்தடியிலேயே சமையல் செய்து சாப்பிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முட்டிப்போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது அவர்கள், எங்கள் சந்ததியினரை பாதுகாக்க, நோய் பரப்பும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூவேந்தர் சேனா ஆதரவு


தமிழ்நாடு மூவேந்தர் சேனா நிறுவன தலைவர் தென்மறவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்கள், மாணவர்கள் நடத்தும் உணர்வுப்பூர்வமான போராட்டத்துக்கு மூவேந்தர் சேனா முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் சுற்று வட்டார விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசுபட்டு உள்ளது.

இதனால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்