தூத்துக்குடியில் பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: ஸ்டெர்லைட் ஆலை-கிராமங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

Update: 2018-03-28 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் 8 இடங்களில் தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவுகள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நிலத்தடி நீர் மாசுபட்டு உள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆலைக்கு கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக நடந்து வரும் பொதுமக்களின் போராட்டங்களால் தூத்துக்குடியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.

அதிகாரிகள் திடீர் ஆய்வு

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் அதிகாரிகள் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில், தாசில்தார்கள் ராமச்சந்திரன், நம்பிராயர், தூத்துக்குடி மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) முத்துஎழில் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வந்தனர்.

அங்கு தற்போது இயங்கி வரும் தொழிற்சாலையை பார்வையிட்டனர். தொடர்ந்து புதிதாக ஆலை விரிவாக்கம் செய்யப்படும் பகுதியையும் ஆய்வு செய்தார்கள். விரிவாக்க பணிகளுக்காக ஆலை நிர்வாகம் பெற்று உள்ள அனுமதி ஆணை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தனர்.

தண்ணீர் மாதிரிகள் சேகரிப்பு

அங்கிருந்து அதிகாரிகள் குழு ஆலையை சுற்றி உள்ள அ.குமரெட்டியாபுரம், குமாரகிரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றனர். அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகள் நடப்பதை மக்கள் அதிகாரிகள் குழுவிடம் காண்பித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கிணறுகள் உள்ளிட்ட நிலத்தடி நீரின் மாதிரிகளை சேகரித்தனர். இந்த கிராமங்களில் இருந்து மொத்தம் 8 இடங்களில் தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர். இந்த தண்ணீர் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அனுப்புவதற்காக அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

அரசுக்கு அறிக்கை


இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேசிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் ஆய்வு செய்து உள்ளனர். அங்கு உள்ள கிணறுகளில் இருந்து அதிகாரிகள் தண்ணீர் மாதிரிகள் சேகரித்து உள்ளனர். இந்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படும். இந்த ஆய்வின் முடிவில் தண்ணீரில் எந்த அளவுக்கு மாசு உள்ளது என்பதை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்