அதிகரித்து வரும் காற்று மாசு

காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டுதான் காற்றின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

Update: 2018-03-28 05:00 GMT
 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட துகள்கள் 10 பிஎம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அளவில் உள்ள துகள்கள் மனித உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவை. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள் 2.5 பிஎம் என்று அழைக்கப்படுகின்றன.

இவைதான் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், இவை சுவாசம் மூலம் உள் இழுக்கப்படும் வகையில் நுண்ணிய அளவு உள்ளவை. சுவாசப் பாதைகளில் எளிதாக ஒட்டிக்கொள்ளக்கூடியவை. ரத்தக்குழாய்களில் பயணித்து இருதயத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. புற்றுநோயை ஊக்குவிக்கின்ற அளவுக்கு ஆபத்தானவை.

ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் துகள்கள் என்பது உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள சராசரி அளவு என்றாலும் அதிக பட்சமாக ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோ கிராம் வரை துகள்கள் இருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்திய அரசு அறிவித்து உள்ள தேசிய காற்று தரக் குறியீட்டு எண்ணின்படி இந்தியாவில் அதைவிட 10 மடங்கு அதிகமாகவே மாசுத் துகள்கள் காணப்படுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, நாட்டில் பல்லாயிரக்கணக் கான பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, பெங்களூருவில் 197 ஏக்கர் பரப்பளவு கொண்ட கப்பன் பார்க்கில் நடைபயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வருபவர்கள் குறைந்துள்ளனர் என்றும், அப்படியே வந்தாலும் பெரும்பாலானோர் முகத்திரை அணிந்து கொண்டுதான் வருகின்றனர் என்றும் அந்த மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை கடற்கரை சாலையிலும் இந்தக் காட்சிகளைக் காண முடிகிறது. மற்ற பெரு நகரங்களிலும் இதே நிலைமை தான்.

ஆனால், முகத்திரை அணிந்து கொள்வதன் மூலம் காற்று மாசுக்கள் உடலுக்குள் புகுவதை முழுவதுமாகத் தடுத்துவிட முடியாது. மாறாக, காற்று மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் வாகன எண்ணிக்கையைக் குறைப்பது, டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, சாலையோரங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதை ஒழிப்பது, கட்டுமானப் பணிகள் வழியாக வரும் மாசுக்களைத் தவிர்ப்பது போன்றவற்றுக்குப் புதிய சட்ட திட்டங்களை வகுத்து துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் செயல்படுத்தினால் மட்டுமே நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க முடியும்.

மேலும் செய்திகள்